ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளை காண்பிக்க உலக சுகாதார அமைப்பு வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி உள்ளது. இது பிரிட்டனில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர்களிடையே கோபமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. இந்தியாவின் புதிதாக அறிவிக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்கள் சாம்பல் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தியாவின் மற்ற பகுதிகள் நீல நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், அக்சாய் சினின் சர்ச்சைக்குரிய எல்லை இடம் நீல நிற கோடுகளுடன் சாம்பல் நிறத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த வரைபடம் WHO இன் கோவிட் -19 காட்சி டாஷ்போர்டில் உள்ளது. இது தேசத்தின் மிக சமீபத்திய தொற்று எண்ணிக்கைகளை காட்டுகிறது. எவ்வாறாயினும் வரைபடங்கள், ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டது என்று WHO தெளிவுபடுத்தியுள்ளது. இது சீனாவின் சதி என்று லண்டனில் வசிக்கும் ஒரு இந்திய தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை வெவ்வேறு வண்ணங்களில் காட்டிய இந்திய வரைபடத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், உலக சுகாதார அமைப்பிற்கு நிறைய நிதி அளிப்பதால் சீனா இதற்குப் பின்னால் இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.