சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), கிரிக்கெட் போட்டியில் விளையாட குறைந்தபட்ச வயது வரம்பை அறிவித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு குறைந்தது 15 வயதாகி இருக்க வேண்டும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

விதிவிலக்கான சூழ்நிலைகளில், 15 வயதிற்கும் குறைந்த ஒரு வீரரை விளையாட அனுமதிக்க உறுப்பினர் வாரியம் ஐ.சி.சி.யிடம் விண்ணப்பிக்கலாம். இதில் வீரரின் விளையாட்டு அனுபவம் மற்றும் மன வளர்ச்சி ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்படும்.
முன்னதாக, எந்தவொரு சர்வதேச கிரிக்கெட்டிலும் கிரிக்கெட் வீரரின் வயதிற்கு எந்த தடையும் இல்லை.
1996 மற்றும் 2005 க்கு இடையில் ஏழு டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தானின் ஹசன் ராசா, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய இளையவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த வலது கை பேட்ஸ்மேன் தனது 14 வயதில் அறிமுகமானார்.
முன்னாள் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய இளைய இந்தியர் ஆவார். அவர் தனது 16 வயது மற்றும் 205 நாட்களில் அறிமுகமானார்.