
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வபெருமாள். ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் .மற்ற இருமகள்களும் திருவெறும்பூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தனர். இளைய மகள் ராஜலெட்சுமிக்கு (17) கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது இதற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அடிக்கடி வலி வரும் போதெல்லாம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். நாளடைவில் தொடர்ந்து வலி ஏற்பட்டு முழங்காலில் கட்டி உருவானது.
இதனால் பள்ளி படிப்பை பாதியில் நின்றது. பின்னர் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு ராஜலெட்சுமிக்கு பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு முழங்காலில் எலும்பு புற்று நோய் உருவாகி உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அடையார் மற்றும் , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதாலும் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் உள்ளதாலும் சிகிச்சைக்கான அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . ஏழ்மை ஒரு புறம் இருந்தாலும் தன் மகளை இந்நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தனது சேமிப்பு தொகை மற்றும் அறிந்த நபர்களிடம் கடன் பெற்ற தொகையை கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தனர்.
அன்றாடம் தன் வேலைகளை தானே கவனித்து கொண்ட மகள், இன்று மெலிந்த தேகம், முடியில்லாத தலை, என்ன செய்கிறோம் என்று தெரியாத மனம், எழுந்து கூட நடக்க முடியாத நிலையை கண்டு பெற்றோர் தினமும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான மருத்துவ செலவுகள் அதிகரித்து செல்வதால் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் எலும்பு புற்று நோயாக இருப்பதால் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது .
இதனால் மனமுடைந்த ராஜலட்சுமி பெற்றோர் தனக்கு தெரிந்த நபர்களிடம் உதவியை கோரியுள்ளனர் . மேலும் ராஜலட்சுமியின் நிலையைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் தங்களால் இயன்ற அளவு சேகரித்த தொகையை வைத்து ராஜலட்சுமிக்கு இரண்டு முறை ஹூமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அன்றாடம் வேலை செய்தால்தான் பசியாறும் சூழலில் உள்ள ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு உணவு மருந்து மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர். ஆனாலும் ஊரடங்கு காலத்தினால் பலர் வேலை வாய்ப்பின்றி இருப்பதால் தொடர் சிகிச்சைக்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் ராஜலட்சுமி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர் .
இந்த நிலையில் ராஜலட்சுமி எதிர்காலம் கருதி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.