
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி ஆண் கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
இவை சாதாரணமான கொசுக்கள் அல்ல.
டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட நோய்களை மனிதர்களுக்கு பரப்பும் கொசு வகைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வகை கொசுக்கள் பறக்கவிடப்படவுள்ளன.
இதனால் எதிர்பார்க்காத பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்னும் எதிர்ப்பு வந்ததன் காரணமாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனம், அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி, இதனால் மனிதர்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள்தான் மனிதர்களுக்கு டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை பரப்புவதாக அறியப்படுகிறது.
முட்டைகளை உற்பத்தி செய்ய இரத்தம் தேவை என்பதால் பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கின்றன.
இந்த திட்டத்தின்படி, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் விடுவிக்கப்பட்டு, அவை பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்.
அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களுக்குள் இருக்கும் ஒருவித புரதம், பெண் கொசு மனிதர்களை கடிக்கும் நிலையை அடையும் முன்பே அவற்றை கொன்றுவிடும்.
ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களை பரப்பிக்கொண்டே இருக்கும்.
இந்த முறையின் மூலம், காலப்போக்கில் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவை குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப்பாதிப்பை கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.