மதுரை என்று சொன்னவுடன் நினைவிற்கு வருவது வீரமும், பாசமும் தான்! "மனிதர்கள் மீது மட்டும் தான் பாசம் காட்ட வேண்டுமா? அனைத்து உயிரனங்கள் மீதும் பாரபட்சம் இல்லாமல் பாசம் காட்டலாம்" என்ற வரிகளுக்கு இணங்க, மதுரையில் இறந்து போன வளர்ப்பு நாயின் நினைவாக வீட்டிற்குள்ளேயே சமாதி எழுப்பி உள்ளனர் மதுரையை சேர்ந்த வாசகர் ராஜா - விஜயா தம்பதியினர்!!
மதுரை பெத்தானியாபுரம் அகஸ்தியர் தெருவில் வாசகர் ராஜா மற்றும் விஜயா தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன் நண்பனின் வீட்டிலிருந்து ஒரு மாதமே ஆன நாயை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து அதற்கு "மணி" என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தனர். கடந்த 5 வருடங்களாக இந்த தம்பதியினருக்கு எல்லாமே மணி தான்! அவ்வளவு பாசத்துடன் மணி இந்த தம்பதியினரை பார்த்து கொண்டது.

மணி என்ற பெயருடைய இந்த நாய்க்கு அவ்வப்போது தங்க சங்கிலி போன்றவற்றை போட்டு அழகு பார்த்து வந்த நிலையில் , இரண்டு மாதங்களுக்கு முன்பு மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும், உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டது. மணியை வெளியே புதைக்க மனமில்லாத தம்பதியினர் வீட்டிற்குள் மணி இருந்த இடத்திலேயே புதைத்தனர். அதோடு, அந்த இடத்தில் சமாதியும் கட்டி தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர்.