புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்த்தவர் இளம் ஓவியர் சௌமியா இயல். இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிருக்கிறார். மேலும் அனிமேஷன் பயின்ற இவர், அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப தளங்களில் பணியாற்றிருக்கிறார். இதற்கிடையில் இவருக்குச் சிறிய வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால், ஒருபுறம் ஓவியம் வரைவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையடுத்து, தனது வாழ்நாள் லட்சியமாகத் தமிழையும், ஓவியத்தையும் ஒன்றிணைப்பதின் மூலமாக இவரது ஓவியத்தைத் தமிழுக்கு ஒரு அடையாளமாக உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் முதல் முயற்சியாக, திருக்குறளை ஓவியமாக வரைய தொடங்கினார். திருக்குறளில் உள்ள 1330 குறளையும், 1330 ஓவியங்களாக வரைந்து, அதனை 1330 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த முயற்சியில், நாள் ஒன்றுக்கு ஒரு குறள் விதம் இதுவரை 218க்கும் அதிகமான திருக்குறளை வரைந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒரு திருக்குறளை வரைவதன் மூலம், அனைத்து திருக்குறளையும் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்றுடன் முடிக்கத் திட்டமிட்டுள்ளார். அவரது நோக்கத்தைச் செயலாற்றத் தினம் ஒரு திருக்குறளை அதன் பொருளுக்கேற்ப, உவமைகளுடன் உருவகம் கொடுத்து ஓவியமாக்கி வருகிறார் சௌமியா இயல்.
இதை வெற்றிகரமாக நிறைவு செய்யவேண்டும் என்பதே என்னுடைய ஒரே ஆசை என்று கூறுகிறார் ஓவியர் சௌமியா இயல்.
"நான் சுயமாக ஓவியம் வரையக் கற்றுக்கொண்ட கலைஞராவேன். இதற்காக யாரிடமும் சென்று பயிற்சி மேற்கொள்ளவில்லை. பள்ளிப் பருவத்தில் ஓவியம் வரைய அதிகமாகப் பயிற்சி செய்தேன். நான் ஓவியம் வரைவதைப் பார்த்து எனது நண்பர்கள் அவர்களை வரைந்து கொடுக்கச் சொல்லுவர். அவர்களை வரைவதின் மூலமாக ஓவியம் வரைவது எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. பிறகு செய்தித்தாள்கள், வார பத்திரிக்கைகளில் வரும் படங்களை வரைய தொடங்கினேன்," என்றார் சௌமியா இயல்.
"இதனைத் தொடர்ந்து, எனது 12ஆம் வகுப்பு நிறைவு செய்த பின்னர், எனக்கு நுண்கலை படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், இளங்கலை படிப்பிற்காக ஆங்கில இலக்கியத்தில் சேர்ந்தேன். அதனை தொடர்ந்து அனிமேஷனை கற்றுக்கொண்டு வேலை செய்து வந்தேன். அனிமேஷன் துறையில் நான் இருந்த போது எனக்கு கதை பலகை (Story Board), விஷூவல் எபெக்ட்ஸ் (Visual effects) உள்ளிட்ட பல பரிமாணங்களில் கவனம் செலுத்த துவங்கினேன்," என்றார்.
இருந்தபோதிலும், பாரம்பரிய ஓவியம் மற்றும் அதை ஒத்த அனிமேஷன் மீதான தாக்கமும், ஆர்வமும் குறையவில்லை. ஆகவே. ஓவியம் வரைவதை நான் ஒரு நாளும் விட்டதே இல்லை என்று கூறுகிறார் சௌமியா இயல்.
ஏன் திருக்குறளை ஓவியமாக வரைகிறார்?
"எனது ஓவியங்கள் மூலமாகத் தமிழுக்கு ஒரு சிறிய அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முதல் முயற்சியாக திருக்குறளை ஓவியமாக வரைய முயன்றேன். இதை வெற்றிகரமாக வரைந்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது முழு கவனமும் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நான் தவறாமல் ஓவியம் வரைந்து வந்தால், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிறைவு பெறும். இதுதான் தற்போது என்னுடைய குறிக்கோளாகவும், வாழ்க்கை பயணமாகவும் இருக்கிறது," எனத் தெரிவிக்கிறார்.
"முதல் முதலில் திருக்குறளை ஓவியமாக வரைய முடிவு செய்தபோது, அதனை எந்த வடிவத்தில் கொடுக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போது திருக்குறளை சர்ரியலிசத்துடன் (Surrealism - ஆழ்மனதில் உள்ள கற்பனைகளைக் கலை வடிவில் வெளிக்கொணர்வது) கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இவ்வாறு நான் தேர்வு செய்யக் கரணம், திருக்குறள் இரண்டே அடி மட்டுமே, ஆனால் அதில் வரும் வார்த்தைகளும், அதன் அர்த்தங்களும் மிகவும் ஆழமானது. அதைப் போன்று தான் சர்ரியலிசம். இதனால், நான் வரையும் திருக்குறள் ஓவியம் புதிய முன்னோட்டத்திற்கு வழிவகுக்கிறது," என்கிறார் சௌமியா இயல்.
இவ்வாறு திருக்குறளை சர்ரியலிசத்துடன் உருவகப்படுத்தி இவர் வரையும் ஓவியத்தை சமூக வளைத்தளத்தில் வெளியிடுகிறார். அதில், பெரும்பான்மையான குறளின் அர்த்தத்தை பார்ப்பவர்கள் சுலபமாக புரிந்து கொள்கின்றனர். ஆனால், சில குறளுடைய அர்த்தம் பார்ப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக அதனுடைய பொருளையும் கொடுத்து வருகிறார் ஓவியர் சௌமியா இயல்.
"தினமும் ஒரு திருக்குறளைப் படித்து, அதன் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்துகொண்டு, அதற்கு எவ்வாறு உருவகம் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ந்த பின்னரே அதை வரையத் தொடங்குவேன். குறிப்பாக நான் வரையும் போது அந்த ஓவியத்தை உவமையாகப் பெயர்த்து, அதற்குத் தகுந்தாற்போல உருவகம் கொடுப்பேன். நான் கொடுக்கும் உருவகம் குழந்தைகளும் எளிதாக புரிந்துகொள்ள முடியும்," என்கிறார் அவர்.
"இதில் பெரும்பாலான திருக்குறளைக் குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்குள் முடித்து விடுவேன். இதில், சில திருக்குறள் மிகவும் கடினமாக இருக்கும். அதன் பொருளை உணர்ந்து அதேகேற்றா உருவகத்தைத் தயார் செய்து, அதை 15க்கு 15 செ.மீ சட்டத்திற்குள் கொண்டு வர நாள் முழுவதும் செலவிட நேரும். ஆனால், எவ்வளவு நேரமெடுத்தாலும் ஒரு நாளில் முடித்து விடுவேன்.
இந்த திருக்குறளைத் தினமும் வரைய வேண்டும் என்று முடிவெடுத்த போது, ஆரம்பத்தில் எனது அன்றாட வேலைகளையும் கவனித்துக்கொண்டு, திருக்குறளையும் வரைய வேண்டும் என்பதால் கொஞ்சம் கடினமாக இருந்ததாகக் கூறும் சௌமியா இயல். பின்னர், நாட்கள் செல்ல செல்ல திருக்குறள் வரைந்துவிட்டு, எனது அன்றாட பணிகளைக் கவனிக்கத் தொடங்கினேன்," என்று தெரிவித்தார்.
இதனால், தற்போது திருகுறளோட என்னை ஒன்றிணைத்து அதனோடு பழகிவிட்டேன். அடுத்த மூன்று ஆண்டுகள் என்னுடைய பயணம் திருக்குறளுடன் தொடரும் என்கிறார் ஓவியர் சௌமிய இயல்.