• Facebook
  • Twitter
  • YouTube
  • Instagram

மேயப் போற மாடு புல்ல தலையில கட்டிகிட்டு போகாது,. தன்னம்பிக்கை வாழ்வியல் கட்டுரை...

மேயப் போற மாடு புல்ல தலையில கட்டிகிட்டு போகாது,.அது ஒரு நல்ல மழைக்காலம் சென்னையில் தான் படிக்க வேண்டும் என சட்டக் கல்லூரியில் சேர்வதற்கு மிகுந்த ஆசையுடன் புறப்பட்டு வந்தேன் ..

ஆனால் இங்கு கல்லூரியில் சேர்வது என்பது கவுன்சிலிங்படி எளிதாகவே இருந்தது, ஆனால் எங்கு தங்குவது என்பது தான் கேள்விக்குறியாக இருந்தது..


இதைப் பற்றிய விவாதம் எங்கள் வீட்டில் நடந்த பொழுது ,எங்கள் அப்பா மிக சாதாரணமாக சொன்னார்,

நீதானே மெட்ராஸ்ல படிக்கணும்னு ஆசை படுற, படிப்பு தான் முக்கியம், எங்க தங்கறது என்பது பெரிய விஷயமே இல்லை , " மேயப் போற மாடு புல்ல தலையில கட்டிகிட்டு போகாது,தானா போய் தான் தேடிக்கொள்ளும்.. அதுபோல நீயா போனா பல வழி கிடைக்கும்" என்றார் ..


அந்த வலிமைமிக்க வார்த்தைகளின் அர்த்தமே அப்போது விளங்கவில்லை, ஆனால் எங்கள் அப்பா 1980 லேயே தமிழைத் தவிர வேறு மொழி தெரியாமல் துபாய்க்குச் சென்று, பிறகு அரபி இந்தி உருது மலையாளம் என பழமொழிகள் பேச கற்றுக்கொண்டார் ..

அந்த திரைகடலோடி திரவியம் தேடிய அனுபவத்தின் வெளிப்பாடுதான் இந்த வலிமைமிக்க வாசகம் என்று நினைத்துக்கொண்டேன் ..


அப்புறம் ஒருவழியாக எங்கள் பக்கத்து வீட்டு ஹெல்பர் மாமா வைத்தியநாதன் அவர்களின் அண்ணன் மகன் கல்யாணசுந்தரம் அறையில் வேளச்சேரி சங்கரன் அவனியில் தங்கினேன்..

நல்ல மரங்கள் சூழ்ந்த ஒரு தோட்டத்தில் வீடு போல் இருந்த இடமாகும்..

என்னதான் அறை சற்று சிறியது என்றாலும் வெளியில் அமர்ந்து நாற்காலி போட்டு படிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.. அப்படித்தான் ஒருநாள் "சூரியகாந்தி பூவின் கனவு" என்ற ஒரு வங்க மொழி சாகித்ய அகாடமி புத்தகத்தை படித்துவிட்டு, அந்த கதையின் காட்சியை நினைவுபடுத்திக் கொண்டே,

கானகம் தரமணி சாலையில் நடந்து சென்றேன்..


மரங்கள் சூழ்ந்த ஒரு தீவுக்குள் வெள்ளைநிற பூக்கள் போன்ற கட்டிடங்களை பார்த்து பரவசம் ஆனேன்..

தரமணி அரசு பல்நோக்கு நிறுவன வளாகத்தின் மரங்கள் சூழ்ந்த அகன்ற சாலை,

மஞ்சள் பூக்கள் இறைந்து கிடக்கும் கண்கொள்ளாக் காட்சி இனிமையாக இருக்கும்..

சென்னைக்குரிய எவ்வித பரபரப்பும் பதட்டமும் இன்றி, அமைதியாக விளங்கும் இந்த இடம் சொல்லனா பரவசத்தை உண்டாக்கியது..


தர்மாம்பாள் பாலிடெக்னிக் முன்பு உள்ள தேநீர் கடையில், தேநீர் அருந்திவிட்டு சர்வீஸ் சாலை வழியாக சென்று, இடது புற சாலையில் திரும்பி நடக்கும் போது தான் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரைப் பார்த்து விட்டு, உள்ளே சென்றேன்..

அந்த நூலகம் பற்றி புரிந்து கொள்ளவே கொஞ்சநேரம் ஆனது.


கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியார் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை, அரிய இதழ்களை முறைப்படுத்தி, சிகாகோ நிறுவனம் ஆராய்ச்சி நூலகமாக காட்சி படுத்தி உள்ளனர் ..

பழைய இதழ்கள் கிடைக்குமென்றதால் ஆர்வத்துடன் தேடினேன்..

அப்பொழுதுதான் வ வே சு ஐயர் நடத்திய பாலபாரதி இதழை தேடி எடுத்தேன் ,பார்த்து பிரமித்துப் போனேன்.

ஐயர் துணிச்சலான சுதந்திரப் போராளி என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஆகச்சிறந்த இலக்கியவாதியாகவும், பன்மொழி வித்தகர் ஆகவும்,

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியாகவும் விளங்கியதை அங்கு தான் தெரிந்து கொண்டேன்.. அந்த இதழ் முழுக்க முழுக்க இலக்கிய விருந்தாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது .

அதிலும் அவர் ராமாயணம் குறித்து எழுதிய ஆராய்ச்சி உரை, காப்பிய ரசனையும் ஆங்கிலப் புலமையும் கலந்த இலக்கியச் சாறு என்றே கூறலாம்..

இராமாயண ஆராய்ச்சி உரை குறித்த கட்டுரையை படித்ததும் ,அந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தீவிர ஆர்வம் உண்டானது.. ஆனால் இப்பொழுது போல் உடனடியாக புத்தகத்தை வாங்க இயலாது..

தேடி அலையவேண்டும்..

பலபேருக்கு வ வே சு ஐயர் பெயரே தெரியவில்லை, அப்படி தெரிந்தாலும் அவர் இந்த புத்தகம் எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் உண்மையில்லை, என்பதுபோல ஒரு அரைகுறை பதிலாகவே சொல்வார்கள்..

ஒருவழியாக அந்த புத்தகத்தை திருவான்மியூர் உ வே சா நூலகத்தில் தேடி எடுத்து படித்தேன்.. மிக அருமையான ஆராய்ச்சி உரை அவசியம் படிக்கவேண்டும் .


இப்படிதான் புத்தகங்கள் ஒன்றை அடுத்து ஒன்று, என அப்படியே வாசிப்பு உலகிற்கு இழுத்துச் சென்றது ..

அப்படித்தான் நூலகங்களுக்குள் கூடு கட்டும் பழக்கம் உண்டானது. சட்டக்கல்லூரியில் நிறைய நேரம் கிடைக்கும் என்பதால் மனம் போன போக்கில் பயணம் செய்வேன்..


ஏதேனும் இலக்கிய கூட்டம், சொற்பொழிவு அறிவார்ந்த புத்தக வெளியீட்டு விழா என எந்த அறிவிப்பை பார்த்தாலும் உடனே சென்றுவிடுவேன் ..

ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள

ராஜா அண்ணாமலை மன்றத்தில் "பிரிவினைக்கு பின்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிந்துகொண்டேன்.


அந்தப் புத்தகத்தின் தலைப்பே ஏதோ ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது என்றுதான் செல்ல வேண்டும் .

ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று அமர்ந்து இருந்தேன்..

ஐநா சபையின் அமைதி பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றிய கண்ணன் என்பவர் எழுதிய புத்தகம்.. அதாவது யுகோஸ்லாவியா செக்கோஸ்லோவியா சிதறிப் போன பிறகு அங்கு உண்டான இனக்கலவரங்கள் ,அகதிகள் பிரச்சனை, பூர்விகக் குடிகள் அனைத்தையும் இழந்து நிற்கும் அவலம், எவ்வித கட்டமைப்பும் இல்லாமல் அதிகாரிகள் திணறிய அவலம் என அனைத்தையும் சுவைபட கூறியிருப்பார்..

அன்று அந்த புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தியவர் கலைஞர் ஆவார்..


நாடு ,அரசு அரசாங்கம் ,மத்திய அரசு மாநில சுயராஜ்யம் மொழிக்கொள்கை ,கூட்டாட்சி தத்துவம் என மனிதர் அரசியல் தத்துவத்தை பிரித்து மேய்ந்தார்.. அதுதான் நான் கேட்ட அவருடைய முதல் உரை என்று நினைக்கிறேன்..


மௌரிய பேரரசு தொடங்கி , மவுண்ட்பேட்டன் ஆட்சி வரை, நிர்வாகம் பற்றி மிக லாவகமாக பேசினார் ..

நிறுத்தி நிதானமாக வரலாற்று தகவல்களோடு நிகழ்த்திய அற்புதமான உரை என்று சொல்வேன் ..

உடனே அந்த புத்தகத்தை அங்கே வாங்கி படிக்க துவங்கினேன்.. பேருந்திலும் படித்துக்கொண்டே வந்தேன் .அப்போது ஆழ்வார் திருநகரில் தங்கியிருந்தோம்.


பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பிறகு வேகமாக நடந்து சென்று, அறையை அடைந்தவுடன் சூடாக ஒரு தேனீர் தயாரித்துக் கொண்டு வாசிக்கத் துவங்கினேன்..

சில மணிநேரங்களில் படித்து முடித்தவுடன் அந்த நாடுகள் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது இருப்பது போல இணையம் ,கூகுள் என்ற அற்புத ஆசான் எல்லாம் அப்போது இல்லை.. ஆதலால் மிகுந்த ஏமாற்றம் ஆகிவிட்டது .யாரிடம் கேட்டாலும் செர்பியா ,செக், ஸ்லோவாகியா மாசிடோனியா பற்றி ஒரு வார்த்தையும் தெரியவில்லை.. ஏமாற்றமாகிவிட்டது..


மறுநாள் தேவநேய பாவாணர் நூலகத்தில் புகுந்து இது தொடர்பான புத்தகங்களை தேடி எடுத்தேன். அதேபோல் அமெரிக்க தூதரக நூலகத்திற்கு சென்று புத்தகங்களை தேடத் துவங்கினேன்..


இப்படித்தான் புத்தகங்கள் உடனான எனது நீண்ட தொடர்பு ,போட்டித் தேர்வை எழுத தூண்டியது.


தேர்வு பற்றி கேள்விப்பட்டதும் மிகுந்த உற்சாகம் உண்டானது பலரும் பலவித ஆலோசனைகளை சொன்னார்கள்,

ஆனால் என் மனதில் ஒரு தேர்வு அதை ஜெயித்துவிட்டால் டெபுடி கலெக்டர் ..

ஒரு பரிட்சை பாஸ் பண்ணிட்டா டிஎஸ்பி..

இது என்னடா இப்படி ஆச்சரியமாக இருக்கிறது ..


ஒரு பரிட்சை அதை பாஸ் பண்ணிட்டா டிஎஸ்பி ..


அப்ப இது வரைக்கும் இதை பற்றி ஏன் நமக்கு யாருமே சொல்லலை.. எந்தப் பள்ளிக்கூடத்திலும்,

எந்தக் கல்லூரியிலும் இதைப் பற்றி சொல்லவே இல்லையே ..

டாக்டர் இன்ஜினியர் வக்கீல் என்றுதானே சொன்னார்கள் .

இந்த டெபுடி கலெக்டர், டிஎஸ்பி பற்றி சொல்லவே இல்லையே என்ற, ஒரு ஆதங்கமும் உண்டானது..


உடனே போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும் என, கல்லூரி வாழ்க்கையில் இருந்தும் நண்பர்களுடனான அரட்டையில் இருந்தும் சற்று விலகிக் கொண்டேன்.


அப்பொழுது சட்டக் கல்லூரி இறுதியாண்டு இன்னும் முடிக்கவில்லை.

ஆதலால் ஒரு முயற்சியாக குரூப்-4 எனப்படும் இளநிலை உதவியாளர் பணிக்குரிய தேர்வை எழுதலாம் என எழுதினேன் .

நன்றாக தயார் செய்து தான் எழுதினேன்.


அட இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணமப்பா என்ற மனநிலையில் எழுதினேன் என்று சொல்லலாம்.. ரிசல்ட் வந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்தால் ,

என் நம்பர் வரவில்லை ..

ஒரு கணம் நிலைகுலைந்து போனேன்..

அப்போதுதான் உறைத்தது

' ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க' வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்தது..


அதன்பிறகுதான் தேர்வின் உண்மையான முகம் தெரிய வந்தது. ஆட்டத்தின் போக்கு, நுணுக்கம் வேறு என புரிந்து கொண்டேன்..

பலத்த அடியை பெற்ற பிறகுதான், பந்தின் வேகம் தெரிந்தது ..

அதன் பிறகுதான் உண்மையான ஆட்டம் ஆரம்பமானது..

உத்தியை மாற்றினேன் .

பாட திட்டத்தை முழுமையாக படித்தேன் .


வரி வரியாகப் படித்து ஒவ்வொரு தலைப்பிற்கும் உரிய புத்தகத்தை தேடி தேடி அலைந்தேன். உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில் குரூப்-2 பாடத்திட்டத்தில் சமூக சீர்திருத்தம் பற்றி இருந்தது 5 மதிப்பெண்கள் வரக்கூடும்,

ஆயினும் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் என்ற அருமையான விரிவான புத்தகத்தை வரி வரியாக வாசித்து உள் வாங்கினேன்.


இப்படித்தான் ஒவ்வொரு பாடத்திற்கும் கனத்த பாடப் புத்தகங்களை மட்டுமே படிப்பது என வைராக்கியம் கொண்டு அலைந்து திரிந்து புத்தகங்களை மட்டுமே வாங்கினேன்..

ஒருபோதும் நான் கைடு பரிந்துரை செய்ய மாட்டேன் ..

அதைப் படிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .

புத்தகங்கள் கிடைக்காத பாடங்களுக்கு தான் கைடு படிக்க வேண்டும்..


பிறகு வினாத்தாள்கள் தேடி சேகரித்து, அதிலும் பழைய ஒரிஜினல் வினாத்தாள்,

எல்லா தேர்வின் அசல் வினாத் தாள்களை சேகரிக்க அலைந்து திரிந்தேன்.

அப்பொழுதெல்லாம் இதுபோன்ற இணையம், பதிவிறக்கம் செய்து கொள்தல் ,போன்ற வசதி வாய்ப்பு கிடையாது.. எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இதேநிலைதான்.. ஆயினும் எனக்கு அசல் வினாத்தாள்களை பார்க்க வேண்டும் என மிகுந்த ஆசை...


குறிப்பாக உத்தரபிரதேச மாநில தேர்வாணையம், ராஜஸ்தான் தேர்வாணையம் ,குஜராத் ,அசாம் என பல்வேறு மாநில தேர்வாணையங்கள்,

அதேபோல் பல்வேறு தேர்வுகள் எஸ்பிஐ ,ஆர்ஆர்பி, என் டி ஏ, எல்ஐசி அசிஸ்டன்ட் என பல்வேறு தேர்வு வினாத்தாள்களை அலசி பார்த்தேன்.

அப்பொழுது தான் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டேன் .

அரசியலமைப்பு ,வரலாறு ,புவியியல், பொருளாதாரம், நடப்பு செய்திகள் அறிவியல் ,எல்லாம் எல்லா தேர்வுக்கும் ஒன்றாகவே தான் உள்ளது ..

கொஞ்சம் கணக்கு மட்டும் மாறுபடுகிறது .

சில தேர்வுகளில் ,அந்த தேர்வுக்குரிய படங்களை கேட்கிறார்கள் .


ஆனால் பொது அறிவு என்பது பொதுவான ஒன்றாகத்தான் இருக்கிறது..

மாவு ஒன்றுதான் உணவு வெவ்வேறு என்பதை உணர்ந்து கொண்ட பிறகு,

புத்தகங்களைப் படிப்பது, கடுமையாக பயிற்சி செய்து பார்ப்பது என,

வெறித்தனமாக பயிற்சி செய்து பார்த்தேன்..


பயிற்சி பயிற்சி பயிற்சி பயிற்சி மட்டுமே !!

வினாத்தாள்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்து ,தினசரி குறைந்தது 300 வினாக்கள் பயிற்சி செய்து பார்த்தேன் ..

அதுவும் பின்னிரவு ஒரு மணிக்கு மேல் மூன்று மணியை கடந்தும் இது நடக்கும் ..

சில நாட்களில் 600 வினாக்கள் கூட பயிற்சி செய்து இருக்கிறேன்..

அது போல் ,

கிடைத்த எல்லா மாதிரித்தேர்வு புத்தகங்களையும் வாங்கி ,நகலெடுத்து முயற்சி செய்து பார்த்தேன் .

இந்த யாகம் விடிய விடிய நடக்கும்.. தேர்வு எழுதிவிட்டு விடையை திருத்தி ,எத்தனை சரி !என்று கூட்டி பார்க்கும்பொழுது ஒருவித நிலை கொள்ளாத பரவசம் உண்டாகும்..


அந்த தேர்வு மதிப்பெண்களை எல்லாம் சதவீதம் போட்டுக் கொண்டே வருவேன் ..67% 74% என்பதுபோல அதில் ஒரு திருப்தி உண்டாகும்..

இரவு விழிப்பு ,அதிகாலை சற்று களைப்பை உண்டாக்கினால் அடுத்து எளிதான பாடத்தை படிப்பேன்.

ஓய்வு என்பதே மாற்று வேலையை செய்வது என்பதை தான் ஒரு பழக்கமாகவே வைத்துள்ளேன்.. ஓய்வு என்பது உடனே எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு ,படுத்துக்கொள்வது அல்ல !அப்படி படுப்பதும் எனக்கு பழக்கமே இல்லை.. உறக்கம் வராது.

அதனால் படத்தை மாற்றி படிப்பேன்..


விடியற்காலை ஐந்து மணிக்கு தான் சற்று கண்ணயர்வேன் .

இந்த நீண்ட நெடிய ஆட்டம் முதல்நிலை தேர்விற்கு ஐந்து மாதங்கள் ,தொடர்ச்சியாக, ஒருநாள் விடுப்பு இன்றி நடந்தது ..

இப்படியாக புத்தகங்கள் மீதான நேசிப்பு வாசிப்பை வசப்படுத்தியது என்றே கூறவேண்டும்.


முடிவுகள் வந்தது.

எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றேன் .

குரூப்-4 தேர்வு எழுதி தோல்வியுற்ற அதே ஆண்டு எழுதிய குரூப்- 1 தேர்வில் வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வானேன் ..


இந்தத் தகவல்கள் எல்லாம் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதால் தான் ,

வாசிப்பும் வாழ்க்கையும் தந்த அனுபவங்களை தொகுத்து,

எனது

"பெரிதினும் பெரிது கேள்"

என்ற நூலை எழுதினேன் ..

இந்த ஊரடங்கு நேரத்தில் நிறைய நண்பர்கள் புத்தகத்தை எப்படி பெறுவது என்று கேட்டார்கள்..


தற்போது இந்த நூல் எல்லோரையும் எளிதாக சென்றடையும் விதமாக அமேசான் கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..

பதிவேற்றம் செய்த சில மணித்துளிகளில் 1294 நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.. மின்னூல் ஆக்கத்திற்கு பெருமுயற்சி எடுத்துக் கொண்ட கரந்தை தமிழ்ச் சங்க கணித ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!!


நீங்களும் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன் பெறுங்கள்! இளைஞர்களை ,

உங்கள் பிள்ளைகளை அவசியம் படிக்க சொல்லுங்கள்!!

என்னால் முடிந்த ஒன்று,

நிச்சயம் எல்லோராலும் முடியும்!! தேவை கடின உழைப்பு மட்டுமே!! வாழ்த்துகள் !!

அன்புடன்

செந்தில் குமார்..


பெரிதினும் பெரிது கேள்

https://www.amazon.in/dp/B08FG561WZ/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D&qid=1596898165&s=digital-text&sr=1-1

1 view0 comments

Subscribe to Our YouTube Channel

  • Facebook
  • Twitter
  • Instagram
  • YouTube

© 2023 by Trichy Outlook. Proudly created by pewee studios